Friday, 24 July 2020

நன்றிகள்...



கிரகங்கள் நேர்க்கோட்டில் அமைய, வால் நட்சத்திரங்கள் வரிசையில் நிற்க எனது பிறந்த நாள் என்ற உன்னத நிகழ்வு நேற்று மீண்டும் நிகழ்ந்தது. காலையில் கண் விழித்தபோது "பையன் பொறந்திருக்கான்"னு யாரும் கத்தவில்லை. டாக்டர் என் காலை பிடித்து தலைகீழாய் தூக்கவில்லை. எந்த நர்ஸும் குளிப்பாட்ட வரவில்லை. அதனால் நானே குளிக்கச் சென்றேன்.
ரசிகர்களின் ஆரவாரம், கட் அவுட்கள், போஸ்டர்கள் ஏதுமில்லை. நான் பிறந்த வருடத்தில் பிராண்டன் லீ இறந்தார். ஒரு வயதானபோது நிக்சன் இறந்தார். இது தொடர, மத்தபடி மோசமான நிகழ்வுகள் ஏதுமில்லை.
பொதுவாக பிறந்தநாளில் நான் கேக் வெட்டுவதில்லை. எதற்காக கேக்கில் எச்சில் தெறிக்க மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு கேக்கை பிசைந்து அடுத்தவருக்கு தயிர் சாதமாய் தருவானேன். எதையாவது சாதித்த பின்னரே கேக்கை வெட்ட நினைப்பேன். இன்னும் காலம் இருக்கிறது. சிறுவயது தானே!
ஆனால் இப்பெல்லாம் கேக் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் “இத்தனை மெழுகுவர்த்தி வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி சொல்லிடுங்க. பாக்டரில இருந்து வரவழைக்கணும்” என்று கடைக்காரர் கோபப்படுகிறார். எல்லா மெழுகுவர்த்திகளையும் கொளுத்தினால் கொரோனோவுக்கு விளக்கேத்தியது போல இந்தியா ஒளிருகிறது. ஊதி அணைக்காமல் பேன் போட்டு அணைக்க வேண்டியிருக்கிறது. அதற்குப்பின் வெளிப்படும் புகையில் ஏதோ வீடு தீப்பிடித்து விட்டதோ என்று பயந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி விடுகின்றனர்.
அதுவும் நேற்றைய பிறந்த நாளில் அண்ணாச்சி விளம்பரம் மாதிரி 'பக்கத்து வீட்டில கொரோனா இருக்கு. எதிர்த்த வீட்டில் இருக்கு. உங்க வீட்டில் இருக்கானு' அரசு கேட்டுட்டு முழு ஊரடங்கு செய்துவிட்டதால் அமைதியோ அமைதி.
நேற்றும் முதல் ஒரு மணி நேரம் பரபரப்பாய் போன்கள் தொடர, சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் போல சிங்க நடை போட்டேன். அதற்கப்புறம் 'துணிய இன்னும் காயப் போடலையானு' அசரீரி கேட்க புழக்கடைக்கு வந்தா எதிர்த்த வீட்டு பெரிய மீசைக்காரர் சேலையை நீவிநீவி காய வச்சிட்டிருந்தார். நான் அவரை வேடிக்கை பார்க்க, ஒரு ஆம்பளையோட மனசு ஆம்பளைக்கு புரிந்தது. அவரு அசடு வழிய அவரு போனதும் நான் காயப் போட்டேன்.
வயதில் ஒரு வருடம் கூடினால் நான் எப்போதும் வருத்தப்படுவதில்லை. அதை நண்பர்களின் வயதில் சேர்த்து விடுகிறேன். எனினும் நேரம் ஒதுக்கி முகநூலில் கவிதை எழுதியவர்களுக்கும், போஸ்ட் பதிவிட்டவர்களுக்கும், நிஜத்தை விட நிழலை அழகாய் பென்சிலில் வரைந்தருளிய இருவருக்கும், போன் செய்த கோடான கோடி அன்பர்களுக்கும் நன்றி கூறும் இதேவேளையில்,
சந்தடி சாக்கில் "அண்ணே" என்று வாழ்த்திட்டு அவர்களின் வயதை குறைத்துக் கொண்ட எதிர் கட்சிக்காரர்களுக்கு கண்டனத்தையும் பதிவிட்டு, இது திரும்ப வட்டியுடன் செலுத்தப்படும் என்று கூறிக்கொண்டு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

கொரோனா திருவிளையாடல்..

கொரானா வைரஸுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் பல நாட்கள் வாய்தா வாங்கிய கொரோனா குழம்பிப் போய் நீதிமன்றத்திற்கு பதிலாக பட்டிமன்றத்தில் ஆஜராகி பராசக்தி டயலாக்கை சைனீசில் பேசியதன் தமிழ் டப்பிங்.
*****
நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை கண்டிருக்கிறது. புதுமையான வைரஸ்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரமுமல்ல. வழக்காடும் நான் புதுமையான வைரசுமல்ல.
வாழ்க்கைப் பாதையில் சர்வ சாதாரணமாக தென்படும் ஒரு வைரஸ்தான் நான். மக்களை தாக்கினேன் உயிர்களை பறித்தேன் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. நிச்சயமாக இல்லை.
மக்களை தாக்கினேன். மக்கள் வேண்டாம் என்றல்ல. மியூசிக்கலியில் மாமாக்களும் ஆண்டிகளும் போடும் குத்தாட்டத்தை தாங்கமுடியாமல்.
உயிர்களை பறித்தேன். இவர்களை தின்பதற்கு அல்ல. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் இவர்கள் தின்னுத்தீர்க்கும் உயிர்களை காப்பாற்ற.
உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்குமே இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்.
நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக. சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்துள்ளது. தீர்ப்பு எழுதும்முன் கேளுங்கள் என் கதையை.
சைனாவில் பிறந்தேன் நான். என் நாட்டில் தவளைகளும், பாம்புகளும் நெளிந்தன. ஒரு அறிவிலிருந்து ஆறறிவு வரை அத்தனையையும் சாப்பிட்டார்கள் அறிவில்லாமல். பக்கத்து வீட்டுக்கு போனால் பல்லியையும், எதுத்த வீட்டிற்கு போனால் எலியையும் ஸ்னாக்சாக கொண்டுச் சென்றார்கள். எல்லா நாடுகளுக்கும் ஓடினேன். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்கும் ஓடிவந்தேன்.
கட்டிப்பிடித்து முத்தா கொடுக்கும் வெளிநாட்டினரையே தள்ளி நின்று கைகூப்பி வணங்க செய்தவன் நான். உலக போலீஸான அமெரிக்கனையே டாய்லெட் பேப்பருக்கு சண்டையிட்டு தண்ணீரில் கழுவச் செய்தவன் நான். ஆனால் இங்கு என்னை நிம்மதியாக வாழ விட்டார்களா கயவர்கள்.
கல்யாணி எல்லாம் கல்யாணி கலப்பட பீரை தூக்கிக்கொண்டு அலைந்தார்கள். அவர்களுக்கு ஊறுகாய் தந்திருக்க வேண்டும். கலப்படமில்லா நல்ல சரக்கை கொடுத்திருக்க வேண்டும். செய்தார்களா. பதினாலு நாட்கள் வீட்டில் இருந்திருந்தால் விலகியிருப்பேன். செய்தார்களா. மீன் வாங்க முண்டியடித்தார்கள். மட்டன் வாங்க கட்டிப் பிரண்டார்கள். தனித்திரு விழித்திரு என்று சொன்னால் 'திரு' வுக்குதான் அது. நாங்க திருமதி என்று வெளியே சுத்தினார்கள் கொண்டையர்கள்.
ஒடுங்கி போன மண்டையனை கொரோனா மண்டையன் என்றார்கள். கோமியத்தை குடித்து என்னை மூழ்கடிக்க பார்த்தார்கள். எனக்கு மஞ்சள் பூசி வேப்பிலை அடித்து பேய் ஓட்டினார்கள். இஞ்சி டீ குடித்துவிட்டு குரங்காக சிரித்தார்கள். சப்பாத்தியிலிருந்து கேக் வரை என் உருவத்தை நகையாடினார்கள். அம்மை போட்ட மூஞ்சி போல் என் படத்தை அசிங்கமாக வரைந்தார்கள். கொரோனா என்ற அழகான பெயரை குரானா, சொர்ணா, குருமா பர்மா என்று கேவலப் படுத்தினார்கள். பிறந்த குழந்தைக்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்தார்கள். ஓடினேன் ஓடினேன். வாழ்வின் எல்லைக்கே ஓடினேன். ஒலியும், ஒளியும் காட்டி என்னை திரும்ப வரவழைத்தனர்.
அரசு சொன்னதைக் கேட்காதது யார் குற்றம்? லுங்கியை போட்டுவிட்டு கேரம் போர்டுடன் ஓடியது யார் குற்றம்? பைக்கில் ட்ரிபிள்ஸில் உலகை வலம் வருவது யார் குற்றம்?
சிகப்பு, ஆரஞ்சு, பச்சை பெயிண்ட் அடித்த மண்டையர்களின் நாட்டுக்கு பெயின்ட் அடித்தேன். நாய்க் கறண்டியதுபோல் அரைமண்டையை சேவ் செய்துவிட்டு தாடையில் சடை போட்டு திரிந்தவர்களின் மண்டையில் முடிவளர்த்தேன். உன்மூஞ்சில பீச்சாங்கையை வைக்க என்று பிரித்து பேசியவர்களின் சோத்தாங்கையையும் மூஞ்சியில் வைக்க முடியாமல் செய்தேன்.
ஹெல்மெட் போட்டு பந்தா பண்ணிய ஆண்களின் தலையில் துண்டு கட்டி வெளக்குமாறை தூக்கச் செய்தேன். மிக்ஸி, கிரைண்டரை பயன்படுத்தாமல் பெட்மாஸ் லைட் போல் மாறிய பெண்களை குத்துவிளக்காக மாற்றினேன். படிப்பு, படிப்பு என்று குமுறிய மாணவர்களை பத்து மணிவரை குப்புறடிச்சி தூங்கச் செய்தேன். ஆண்களின் போலி முகத்தையும், பெண்களின் உண்மை முகத்தையும் உலகிற்கு காட்டினேன். வெயிலில் அலைந்து கருகியிருந்த கருவாயன்களை வெள்ளையாக்கினேன். கிச்சன்களில் கீழடியில் தோன்றிய உப்புமாவைத் தவிர மற்ற உணவுகளையும் மீட்டெடுத்தேன். உலகில் அவசியமேது, அலங்காரமெது என்று புரிய வைத்தேன்.
நிலவில் ஆயா வடை சுடுவதை தெளிவாக தெரியுமளவு பூமியை மாசிலிருந்து காத்தேன். டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ்காரர்கள் இந்த மூவரும் வராமல் இருந்திருந்தால் உலகத்தை மாற்றியிருப்பேன். மனிதர்களை மைனாரிட்டி ஆக்கியிருப்பேன். அன்பை கடவுளாக்கி, மனிதத்தை மதமாக்கி இருப்பேன்.
மனிதன் மாறாதவரை கொரோனோக்களும், கர்மாக்களும் திரும்ப வரும். இதுதான் எங்கள் வாழ்க்கையேட்டின் தத்துவம், பாடம்.
கொரோனா நல்லதா கெட்டதா என்று கன்ப்யூஸ் ஆன நடுவர் துல்கர் சல்மான் பாப்பையா எதிர்கட்சிக்காரரான மொரட்டு தமிழரிடம் அவரின் வாதத்தை தாக்கல் செய்யச் சொன்னதாக கேள்வி.

Tuesday, 7 July 2020

கொரோனா லீவ்..

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் எனும் முத்துசாமி மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினார். பின்னர் கீழேயிறங்கி உடலைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் (அசோக்) கண் விழித்துக்கொள்ள...
இம்முறை முந்திக்கொண்ட விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் கேள்வி கேட்டார் "உலக நாடுகளை கொரானா தாக்கி எல்லோருக்கும் இரண்டு மாதம் லீவு கொடுத்துள்ளது. இப்படி லீவு கிடைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் தமிழ்நாடு எப்படி இருந்திருக்கும். அதைப் பற்றி சொல்?" என்று கேட்க
வேதாளம் தலையை சொரிந்து கொண்டு "மன்னா இது ஒரு dry subject. என்னத்த சொல்ல"
"யோசி. தொங்கிட்டு தூங்கிட்டே தானே இருக்க"
வேதாளம் பறந்து சென்று மரத்தில் தொங்கியடி பேசத் தொடங்கியது.
"கேள் மன்னா! மது பிரியர்கள் இரண்டு மாதத்திற்கு தேவையான சரக்குகளை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டு “சரக்கு வச்சிருக்கேன் எறக்கி வச்சிருக்கேன்” என பாடித் திரிவர்.
மாட்டிக்கொண்டு முழிக்கும் பத்தாவது, 12வது மாணவர்கள் “அந்த மிச்சம் இருக்கிற பரிட்சையை சீக்கிரம் வைங்க” என்று கேட்டு எழுதி விட்டு நிம்மதியாக இருப்பார்கள். பரிட்சை எழுதாமல் பாஸான ஆடாம ஜெயிச்சோமடா புள்ளிங்கோ நாலு மாதம் முன்னாடியே படிப்பதை நிறுத்தியிருப்பார்கள்.
சலூன் பிரச்சனைக்காக ஆண்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா என மொட்டை போட்டுக்கொண்டு தமிழ் தேசம் மொட்டையர்களின் தேசமாக மாறியிருக்கும். மொட்டை மூளைக்கு நல்லது என்று ஒரு கும்பலும், அரசு மக்களுக்கு மொட்டை போட்டு விட்டது என்று எதிர்க்கட்சிகளும் பிரசாரிப்பர்.
பெண்கள் எலுமிச்சை சாத பவுடர், புளிசாத பவுடர், உப்புமா பவுடர், கேசரி பவுடர் என வாங்கி குவித்திருப்பர். சில பெண்கள் இரண்டு மாதம் டைவர்ஸ் வாங்கி கொண்டு ஓடிப்போயிருப்பர்.
புது மருமகன்கள் அனைவரும் மாமியார் வீட்டுக்கு சென்று தங்கிக் கொண்டு குந்தித் தின்று குன்றை கரைத்து வயிற்றை தள்ளிக்கொண்டு அலைவர்.
ஐடி நிறுவனங்கள் தாலி போன்று ஒரு வஸ்துவை கண்டுபிடித்து எம்பிளாய்ஸ் கழுத்தில் கட்டி "எப்ப சாப்பிடுறான், எப்ப வேலை செய்றான்” என்று கண்காணிப்பர்.
அரசு வழக்கம் போல டாஸ்மாக் உண்டு இல்லை. ஆன்லைன் கிளாஸ் உண்டு இல்லை னு வெள்ளாடிட்டு இருக்கும்.
கொரோனா நுழையாமல் அமெரிக்காவை சுற்றிப் டிரம்ப் சுவர் எழுப்பி இருப்பார்.
சீன ஊடகங்கள் வழக்கம் போல கொரோனா பத்தி பேசுன டாக்டரை காணோம். லேபை காணோம்னு தேடிட்டு இருக்கும்.
"சரி இந்த பதிவுக்கு எப்படி பின்னூட்டங்கள் வரும். அதையும் சொல்" என்று விக்கிரமாதித்தன் கேட்க வேதாளம் தயங்கியது.
"பரவாயில்லை சொல் நம்ம புள்ளிங்கோ தான். கோவிக்க மாட்டார்கள்".
“போன பதிவிற்கு பின்னூட்டங்கள் இட்டவர்களின் அதே வரிசையில்”
P Muthu Swamy அருமை
Srikanth Jayaraman அசோக் அண்ணே பக்கத்துல தொங்குற பெண் வேதாளம் யாரு ?
Selvaprakash Nattudurai வேதாளத்தை
வென்ற
விக்கிரமாதித்தனே
விந்தையை விதைத்த
வித்தகனே
வெளுத்துட்டீங்க....
Suja Sujatha பிரமாதம் ப்பா
Neela Alangudy இதேபோன்று நண்பர் கந்தசாமி பத்தாவது படிக்கும் நண்பர்களுக்காக வேதாள வித்துவான் என்ற புத்தகம் எழுதி கருத்துக்களை தொங்க விட்டிருக்கிறார். ரொம்ப நேரம் தலைகீழா தொங்காதீங்க. மூளை சரியாயிடும். அப்படியும் ஆகலைன்னா நாளைக்கு நான் ஒரு போட்டோ போடுறேன்.
Thiruppathi Vasagan அட்டகாசம் நண்பரே. பிரமாதமாக வந்திருக்கிறது. 😁😁😁💐💐💐💐💯💯💯💯💯
Shanthirajasheker Shanthi Life is like that. Men have to hang in front of wives
Lasyaa சூப்பர் பாஸ்.
அம்மைநாதன் சித அண்ணா கலக்கல்..
Anuradha Prasanna எப்போதும் மரத்துல ஏறி இந்த அசோக வேதாளத்தை வெட்றதுக்கு மரத்தையே வெட்டித் தள்ளியிருந்தா வேதாளத்தை வாக்கிங்கிலயே கூட்டிட்டு போயிருக்கலாம்.
TK Vidhya Kannan இப்படி லீவு கிடைக்குமென முன்பே தெரிந்திருந்தால் கொஞ்சம் தயாராக இருந்திருக்க முடியும். சரி எந்த இடத்துல தொங்கிட்டு இதையெல்லாம் யோசிச்சீங்க..
Joseph Alex நம்மளும் தொங்குறோம்.. படிச்சிட்டு.
Padma Sundaram ஆபீஷ்ல உப்புமா பவுடரெல்லாமா கிடைக்குது ? ஆபீஸ் எங்கேயிருக்கு..
Kalai Kalaiselvi சூப்பர் சகோ. எங்கியோ போயி தொலஞ்சி போயிட்டீங்க.
Anandhi Jeeva தபூ சங்கரை கொன்னுட்டு வேதாளமாயிட்டீங்களா. இந்தா வர்றேன்.
💐💐💐💐💐💐💐

டிவி சூழ் உலகு.....

டிவி சூழ் உலகு.....

டிவி எனப்படும் அகில உலக இடியட் பாக்ஸ் மற்ற நாடுகளில் பொழுதுபோக்கிற்கு பயன்படுகிறன. ஆனால் இந்தியாவில் மட்டும் மக்களை இடியட்டாக்கி, வீடுகளின் நடுவில் அமர்ந்து கொண்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டுள்ளன. விடியும்போதே 'மகர ராசி நேயர்களே' என்ற கரகர குரலை கேட்காவிட்டால் பலருக்கு மனச்சிக்கல் ஆரம்பித்து மலச்சிக்கலில் முடிகிறது. இதனால்தான் சிலர் வீட்டில் பாத்ரூம் இல்லாவிட்டாலும் டிவி இருக்கிறது.
சட்டி போல பெட்டியாக ஆரம்பித்த டிவிக்கள் இப்போது காலத்திற்கேட்ப ஸ்லிம்மாகி சுவரில் பல்லி போல ஒட்டிக்கொண்டுள்ளன. கொரோனோ தாக்குதலுக்கு பின்னர் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக டிவி மாறியிருக்கிறது. முதல் பொருள் ஒலிம்பிக் ஜோதி போல அணையாமல் எரியும் கிச்சன் ஸ்டவ்.
நியூஸ்களை தவறிப்போய் பார்த்தால் உலக அளவில் வெறுக்கப்படும் இரண்டாவது விஷயமாக கொரோனா இருக்கிறது. முதலிடத்தில் யார் என்பது நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை பொறுத்து மாறலாம். ஆனால் முதலிடத்தில் மருமகளுக்கு மாமியார் என்பதும் மாமியாருக்கு மருமகள் என்பதும் சமாதி மேல் அடித்து செய்யக்கூடிய சத்தியமான உண்மை.
நண்பர்களின் வீட்டிற்குச் சென்றால் உளமாற உள்ளே அழைத்து உபசரித்தது ஒரு காலம். இப்போதெல்லாம் டீவியில் ஓவர் மேக்கப் பெண்மணி கதறிக் கொண்டிருக்க குடும்பமே ஹாலில் அமர்ந்து கண்ணை துடைத்துக் கொள்கிறார்கள். நம்மை உள்ளே அழைத்து உட்கார வைத்துவிட்டு கமர்சியல் பிரேக்கில் மட்டுமே பேசுகிறார்கள். “வாப்பா சோனையா நல்லா இருக்கியா”.
உறவுகளை கொச்சை படுத்தாமல், அடுத்த குடும்பத்தை கெடுக்காமலிருக்கும் டிவி சீரியல்கள் டிராயர் போடாத ஆண்கள் போல அரிதாகி விட்டன. பெரும்பாலும் அனைத்து டிவி சீரியல்களிலும் பெண்களே வில்லிகளாக இருப்பதன் காரணத்தை பெண்கள்தான் சொல்லவேண்டும். கன்னித்தீவு போல சில சீரியல்கள் இவருக்கு பதில் அவர், அவருக்கு பதில் எவர் என்று மாற்றிக்கொண்டு தொடர்கின்றன. கதாநாயகியின் 10 மாத கர்ப்பம் டிவி சீரியலில் 30 மாதத்திற்கு ஓடுகிறது, யானையின் பேறுகாலமே 22 மாதங்கள்.
விளம்பரங்களுக்கு நடுவில் காட்டப்படும் சில நிமிட மெகா சீரியல் வில்லிகளின் முகத்திலிருக்கும் ஒரு இன்ச் பவுடரும், அவர்கள் மூஞ்சியை சுத்தி சுத்திக் காட்டுவதும் கொரோனோ வைரஸை விட கொடுமையாய் இருக்கின்றன. கொரோனோவால் கிடைத்த ஒரே நன்மை இந்த டிவி சீரியல்களை நிப்பாட்டியதே. பல வீடுகளில் மணியடித்தால் சோறு கிடைப்பதாய் கணவர்கள் சொல்கிறார்கள்.
வயதானவர்கள் நியூஸ் சேனலை விடுவதேயில்லை. அருகில் அமர்ந்து கொண்டு மாற்றி மாற்றி நியூஸ் சேனலை பார்க்கிறார்கள். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல.
தமிழில் பேசும்போதே "ராமன்ம ரத்தைப்பி டுங்கினானே" என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பேசும் டிவி ஆங்கர்ஸ் கையை நீட்டி கண்ணை குத்தாத தூரத்தில் பாதுகாப்பாய் அமர்ந்து கொண்டு டிவி பார்ப்பது நல்லது.
டிவியின் பயன்பாடு மெதுவாக குறையக் காரணம் டிவி குஞ்சு பொரித்தது போலிருக்கும் மொபைல் போன்களே. அனைத்து செய்திகளும் வாட்ஸ் அப்பில் சுடசுட வர, டிவி எதற்கு என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் அழிந்தாலும் லைவாக வாட்ஸ் அப்பில் தெரிந்து விடும் நிலை. இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடந்த டிவியின் உயிரை காப்பாற்றியதில் சீரியல்களுக்கு பங்குண்டு. அதுவும் குறைந்து போனிலேயே டிவி சீரியல்களை நம்ம அப்ரசெண்டுகள் பார்க்க ஆரம்பித்த காலத்தில் கோடைமழை போல வந்த கொரோனா மீண்டும் டிவிக்கு புத்துயிர் தந்துள்ளது.
'வா வா வாத்யாரே வா வஞ்சிக்கொடி' என்ற சத்தான பாடல்கள் பக்கத்துக்கு வீட்டு டிவியில் கேட்கத் தொடங்கியுள்ளன.
இதிலிருந்து டிவியின் வாழ்வதனை போன் கவ்வும். டிவி மறுபடி வெல்லும் என்பது தெரிகிறது..