Saturday, 17 February 2024

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5

கல்லூரி தென்றல்

நான் வான் நோக்கி நடக்க, நிலம் குனிந்து நடந்து வந்தாள் அவள். பட்டு உடலில் காட்டன் சேலை அணிந்த தேவதையாய், தேனூறிய கனியொன்று கால் முளைத்து நடப்பதாய் தோன்றியது. கண்கள் நான்கு உராய்ந்ததும் கரண்ட் கம்பிகள் மோதியது போல மனதுக்குள் பொறி பறந்தது. என் இதயத்துடிப்பு இசையாய் கேட்டது. காட்சிகள் வண்ணமயமாகின. அவள் காதல் உணர்வுகளின் ஆலயம். அழகுகளின் சரணாலயம்..

எனது அத்தனை பாதைகளும் அவள் வகுப்பின் வழியே மாறியது. எனது திசைகள் அவளையே சென்றடைந்தன. அவள் விழிகளின் முற்றுகையில் வாழவும் வழியில்லாமல், மீளவும் வழியில்லாமல் போனது. உன் தோழியிடம் என்னைக்காட்டி சிரிக்கையில் காதலின் முதல் பூ பூத்தது.

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 5

அணுக்கள்தோறும் துளிர்த்த காதல்
அணுக்கத்தை வேண்டுகிறது.
நீ அருகிலில்லா பொழுதுகளில்
வாழ்வு துறவேற்கிறது

நீயும் நானுமான நாட்கள்
நிகழ்காலத்தை சார்ந்தவை
நீயும் நானுமற்ற நாட்கள்
இறந்த காலத்தை சார்ந்தவை
உன் விரல் நுனி தீண்டும் வரையில்
எதிர்காலமில்லா எந்திரம் நான்.

உன் விரலோடு விரல் கோர்க்கையில்
ஐம்புலனும் அலைபாய்கின்றன.
ஆத்மா தத்தளிக்கிறது
உலகையே காதலிக்க தோன்றுகிறது
காதல் படியளக்கும்
காதலர் தெய்வம் நீ

கோடானு கோடி
இதயங்களின் வேண்டுதலாய்
தெய்வங்கள் தோன்றின.
தெய்வங்களின் பிராத்தனையாய்
நீ வந்தாய்

நீ கையெழுத்திட்ட புத்தகங்கள்
காதலின் புனித நூலாக,
அடிக்கோடு இட்டவை
காதல் இலக்கணம் ஆகின.
வாழ்ந்த தெரு
என் புனித யாத்திரை தலமானது.
உனது பிறந்த நாள்
காதலர் தினமாக
மலர்ந்த நாள்
மலர்களின் தினமானது.

உனக்கு துணை வர
சூரியனும், சந்திரனும்
போட்டியிட்டன
என்னை தேர்ந்தெடுத்தாய் நீ!
சூரிய, சந்திரர்களை
கிரகணங்கள் பீடித்தது.


நடக்கையில் நாலடியார்
பேசுகையில் திருக்குரல்
உருவத்தில் சீவகசிந்தா மணி
கற்பித்தது கள வழி நாற்பது
தமிழ் தந்த காதல் மதம் நீ

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4

 வேலன்டைன் டே ஸ்பெசல் ...

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 4
இளைஞரால்
இளைஞர்களுக்காக
இளைஞருடைய படையல்.....

உன் வீட்டு சொர்க்க வாசல்
திறக்கும் வரையில்
நிறங்கள் கருப்பாய்
உயிர்கள் மயங்கி
இருளேறி இருக்கின்றன.
வாசலில் கோலமேற்றி
உலகை துவக்கி வைத்து போ.

உன் காலடிச்சுவடுகளை
தழுவி முத்தமிட
அலைகள் முயல்கின்றன.
தனக்கே உரிமையென்று
கடற்கரை மறைத்துக் கொள்கிறது.

மாத இதழ்கள்
வார இதழ்கள் போலில்லா
மன்மத இதழ்கள்
உன்னுடையவை.
இதழ் கொண்ட வரியெல்லாம்
சொற்களை கொள்ளாமல்
சொர்க்கத்தை கொண்டவை...

உன் பெயரை தொடர்ந்து வர
என் பெயர் தவமிருக்கிறது.
இழுத்துச் சேர்த்துக் கொண்டு
இதயத்தை வரமாய் கொடு.

அன்பை முதலாய் இட்டு
உயிரை விதையாய் இட்டு
காதல் பயிர் செய்பவன் நான்.
கொள்முதல் செய்வாயா
கொல் முதல் செய்வாயா..

உன்னுடன் பேசி தமிழைக் கற்றேன்
பேசாத தருணங்களில் ஆங்கிலம் கற்றேன்.
கண்ணசைவில் கணிதம் பயின்றேன்
சந்திப்புகள் எல்லாம் வரலாறு ஆகின
உந்தன் மேனியே எனக்கு புவியியல் ஆனது .
மொத்தத்தில் நீ எனது காதல் கல்லூரி.

உன்னுடன் பேசிய நாட்கள்
சுவர்க்கம் ஆகின.
பேசாத நாட்கள் நரகமாகின.
கண்டு, பேசமுடியா நாட்கள்
திரிசங்கு நரகமாகின.

நீ கட்டும் பட்டு சேலைக்காக
புழுக்கள் உயிர்துறக்கும்.
பஞ்சுகள் சேலையாக
பருத்திகள் மோட்சம் புகும்.
உன் தரிசனம் கிடைத்தால்
உலகம் சுபிட்சம் பெரும்.

சாதல் இல்லா உலகம்
காதலில் சாத்தியம்
காதல் இல்லா உலகில்
சாதலே சாஸ்வதம்..
All reactions:
Lasyaa, Thiruppathi Vasagan and 38 others

தர்பூஸ் கவிதைகள் - பார்ட் 3

 அமுத விழிகள்...

திருமண நிகழ்வின் முதல்நாள் மணப்பெண்ணின் தோழிகளுடன் தட்டையேந்திக்கொண்டு அல்லிகள் புடைசூழ ஆம்பலாய் நடந்தாய். உனது முதல் பார்வையிலேயே என் மனம் தூண்டினில் மீன் போல சிக்கிக்கொண்டது. பார்வைகளின் ஸ்பரிசத்தில் காதல் மனதில் அடிக்கல் நாட்டியது. அடுத்த மின்னல் பார்வை மேகமனதை துளைத்துச் செல்ல நீரிடியை தாங்கி வந்த உன் பார்வையால் என் மனதில் காதல் ஊற்றெடுத்தது. அடுத்தடுத்த பார்வைகளின் கதகதப்பில் காதல் லாவாக்கள் உருவாகி பட்டாம்பூச்சிகளாய் இறகு முளைத்து சிறகடித்தது.
முதல் நாளிரவு தாவணியில் பிறை நிலவாய் பவனி வந்தவள் மறுநாள் காலையில் முழுமதியாய் சேலையில் உதிக்க நிலவிடம் தடுமாறிய மனது முழுமதியிடம் சரணாகதி அடைந்தது. மண்டபத்தில் நீ இங்குமங்கும் நடக்கும்போது பார்வைகளை கொய்து மனங்களை சிறை பிடித்துச் சென்றாய். ஆண்களின் பனிப்பார்வைகளையும், பெண்களின் வெப்பப் பார்வைகளையும் புடவைத் தலைப்பில் முடிந்து பொன்னிற இடையில் சொருகிக்கொண்டு, மன்னர்களை மண்டியிட வைத்த கிளியோபட்ராவாய் வலம்வந்தாய்.

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 3

கடைக்கண் கருணையில்
கவிஞர்களையும்
அரைக்கண் வீச்சில்
அறிஞர்களையும்
முழுப் பார்வையில்
அடிமைகளையும்
உருவாக்கும்
கடவுள் இவள்.
ஆண்கள் மட்டும்
பிரவேசிக்கும்
காதல்தேசத்தின்
கருமாரி இவள்.

பார்வையில் காத்தலையும்
அணைப்பினில் படைத்தலையும்
சிரிப்பினில் அழித்தலையும்
செய்யும் நீ
தேவதையா
இல்லை
தேவதைகளின் தேவதையா !

யாழினிதா குழலினிதா என்ற
வள்ளுவனின் ஆராய்ச்சி
உன் குரலே சிறந்ததென்று
முடிவுக்கு வந்திருக்கும்.

வட்டச்சூரியனை
சுழலும் நிலவுகளாய்
மருதாணி இட்ட
உன் கை பற்றி
நடக்கையில்
ஒலிம்பிக் ஜோதியை
ஏந்தும் வீரனாய்
மனம் எக்களிக்கிறது.

உன்னைப்பற்றி
எழுதிய
கவிதைத்தாளில்
இருந்து
அறையெங்கும்
நிரம்பி வழிகிறது
உன் பேரழகு.

என்னை என் வீட்டிலும்
உன்னை எதிர்வீட்டிலும்
படைத்து விட்டு
கடவுள் கவிதை வேண்டி
காத்திருக்கிறார்.
கண்ணைக் காட்டு
அவர் கடனைத்தீர்க்க
வேண்டும்.

கோவிலைப் பார்க்கும்போது
தானாய் குவியும் என் கரங்கள்
உன்னை பார்க்கும்போதும்
வணங்கி விடுகின்றன.
அருள்பாலித்து விட்டு போ.

தர்பூஸ் கவிதைகள் - பார்ட் 2

 தேவதை உலா..

மழை பெய்து நின்ற பிறகும் மரங்கள் தூறும் ஒரு மண்வாசனை நாளில் உன் வீட்டருகே நின்றிருந்தேன். மெல்லியதாய் வீசிய குளிர் காற்றுக்கு உடல் சிலிர்த்துப்போக அருகிலிருந்த கடையில் தேநீர் வாங்கிக் கொண்டு உனக்காக காத்திருந்தேன். கையில் வாங்கிய கோப்பை உதட்டை நெருங்குவதற்குள் ஆறியிருந்தது.

வானத்தின் ஒரு துளி பூவுலகில் சிந்தியது போல நீலநிறச் சேலையில் ஒரு கையில் குடையையும், மறுகையில் பேக்கையும் அணைத்துக்கொண்டு என்னை நோக்கி மிதந்து வந்தாய். மல்லிகைப்பூ சூடிவந்த ரோஜாவாய். கண்ணில் தோன்றிய உன் பிம்பம் நெஞ்சில் சுடரையேற்றி உடலின் வெப்பத்தைக் கூட்டியது. கையிலிருந்த கோப்பை மீண்டும் சூடாகியது. தேநீரின் ஆவி யும் பறந்தது.

தொலைவிலேயே என்னை அடையாளம் கண்டுகொண்ட உன் உதடுகளில் தோன்றிய புன்னகைக் கீற்று எனது உள்ளத்தில் வானவில்லை ஏற்படுத்த, உடலில் உற்சாகம் கொப்புளித்து சிறகுகள் படபடத்தன. பிரபஞ்ச வெளியில் தேவதையை தரிசித்தவனைப் போல் மயங்கி நின்றேன்.

தர்பூஸ் கவிதைகள் பார்ட் 2...

என்னடா வென்று
புருவத்தை சுருக்கி
முகத்தை உயர்த்தி
விரல்களை மலராய் குவித்து
நீ சிரிக்கும் போதெல்லாம்
பேச நினைத்ததின்
முதல் வரி
தொலைந்து போகிறது
தமிழ் தரை தட்டுகிறது.

நீ தினமும்
செல்லும் தெருக்களில்
பகைமை மறைந்து
அன்பு மலர்கிறதாம்.
தீவிரவாதத்தை ஒழித்து
மிதவாதத்தை பரப்பும்
மன்மதவாதி நீ.

எப்போதாவது தோன்றும்
வானவில்லைக் காட்டி
பெருமை அடித்து
கிடந்தது வானம்.
பூமிவில்லாய்
நீ தோன்றும்வரை.

உனது வேண்டுதல்களை
நிறைவேற்ற
கடவுள்கள்
வரிசையில் நிற்கிறார்கள்.
உன்னையே வேண்டிப்பெற
நான் கடைசியில்.
வரம் தருகிறேன்
சொர்க்கம் போகிறாயா
என்றார் கடவுள்
இவளுடன் போகிறேன்
என்றேன் நான்.
நீயில்லாமல் சொர்க்கமேது?
நீயிருந்தால் நரகமேது?

நீ சூடிய மலர்கள்
முக்தி அடைந்தன.
நீ வாங்காமல் விட்ட மலர்கள்
மறுஜென்மம் வேண்டி நிற்கின்றன.

திராட்சை பெண்ணே
நீ தினமும் தலைகுளிக்கும்
தண்ணீரெல்லாம்
ஆற்றில் கலந்திருந்தால்
பொன் விளைந்திருக்கும்.
கடலில் கலந்திருந்தால்
கடல்நீர் அத்தனையும்
ஒயினாகியிருக்கும்.

நேர்த்தியாய் உடுத்திய
காட்டன் புடவையில்
நெடுநேரமாய்
அமர்ந்திருக்கிறாய்
சுயம்புவாய் தோன்றிய
அம்மனென்று
கோவில் கட்ட நினைக்கின்றனர்..

No photo description available.
All reactions:
Anuradha Prasanna, Lasyaa and 44 others

தர்பூஸ் கவிதைகள் - பார்ட் 1

இந்த சிறுவனுக்கு தபூ சங்கரின் தேவதைகளின் தேவதை என்ற புத்தகத்தை நண்பர் ஒருவர் அறிமுகம் செய்தார். தபூ சங்கரின் பாணியில் சில வரிகள் எழுதத் தோன்றியது..

தர்பூஸ் கவிதைகள்...

என் வாழ்நாட்கள்
உனது பிறந்தநாளில்தான்
துவங்குகின்றன.
நீ பிறப்பதற்கு முன்பான
நாட்கள் வாழாவெட்டி நாட்கள்.

நீ கடற்கரையில் நிற்கும்போது
உன் கால்களைக் கழுவி
கடல் முகம் கழுவிக் கொள்கிறது.

காதல் உணர்வுமல்ல
மதமுமல்ல.
சுவாசம்.
நீ சுவாசித்த காற்றை தந்து
என் சுவாசத்தை மீட்டியெடு.

கடவுள் மனிதனை படைத்தான்
மனிதன் காதலைப் படைத்தான்
உன்னை கண்டதிலிருந்து
கடவுள் மனிதனாக
தவமிருக்கிறான்.

ஒளியற்ற என் வானில்
நிலவாய் வந்தாய் நீ.
இப்பொது
நிலவில் மட்டும் வாழும்
ஆர்ம்ஸ்ட்ராங்காய் நான்.

நீ மடிப்பு, மடிப்பாய்
நீவி நீவி
மறைத்தும் மறைக்காமல்
உடுத்தும் சேலைகள்
என்னை
துவைத்துச் செல்கின்றன.

நிலவில் முகம் காட்டுவதில்லையென
நிலவு குறைபட்டுக் கொள்கிறது.
சற்று உலாவி விட்டு வா.
உன்னிடமும் ஒளிபெற்று
வாழ்ந்துவிட்டு போகட்டும்.

நீ கைகளை குவித்து
கண்களை மூடி
தியானிக்கையில்
உன் மனதில்
வந்து போக
அனைத்து கடவுள்களும்
போட்டி போடுகின்றன.

ஒரு கண்ணில்
காதலைக் காட்டி
மறுகண்ணில்
கோவத்தைக் காட்டி
கடந்து செல்கின்றாய்
இரு கண்களிலும்
காதலைத் ஏந்தி
கசிந்துருகுகிறேன்
வாழ விடு அல்லது
வாழ்க்கை கொடு

கூச்ச நாச்சம் கருதி சில சென்சார்ட் கவிதைகள்..
காற்றின் ஈரப்பதத்தை
அறிய ஹைக்ரோமீட்டர்.
உனது இதழ்களின்
ஈரப்பதத்தை அறிய
என் இதழோமீட்டர்

உன் பார்வை மின்னல்
என் மனதை துளைத்துவிட்டு
நகர்ந்தபோது
எனக்குள் மழை பெய்தது .
இப்போது அலை அடிக்கிறது.
சீக்கிரம் வா.
முத்துக் குளிப்பது போல
முத்தம் குளிக்க வேண்டும்.

சில ரிஜெக்டட் வரிகள்..
காந்தி தேசம்
கண்ணீர் தேசமாக
மாறாமலிருப்பது
சில காதல் வரிகளால் தான்

உனது கண்ணீர்ப்பு விசையில்
சுற்றி வருகிறேன்
நிலவாக.
எனது அமாவாசைகளை
பௌர்ணமியாக்கி விட்டு போ.

உனது பெயர்
இடம்பெறா நிறங்கள்
உனது முகம்
இடம்பெறா ஓவியங்கள்
உனது சிரிப்பு
இடம்பெறா இசைகள்
இவை அனைத்தும்
உயிரில்லா உடல்கள்.

சக்கரத்தின் சுழற்சியில்
தூரம் தெரிகிறது.
உன் விழிகளின் சுழற்சியில்
காதல் தெரிகிறது.